மனித உரிமை

    



      'மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை'.  "மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ , அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு வழங்கு" என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவமாகும்.


உரிமை 

1. 'உரிமை என்பது ஒரு நலனை அடைவதற்காக சட்டப்  பூர்வமாக உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரம்'  - ஆலன் (Allen)

2. 'அரசாங்கத்தின் சம்மதம் மற்றும் உதவியுடன் பிறருடைய செயலைக் கட்டுப்படுத்துவதற்காக  ஒரு மனிதனிடத்தில் குடிகொண்டுள்ள திறமையே உரிமையாகும்'  - ஹாலண்ட் (Holland)


3. "சில இயற்கையான அதிகாரங்களைப்  பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி, சில நிலைமைகளில் மக்களின் நிர்பந்தத்தின் உதவியால் பாதுகாப்பு, இழைக்கப்பட்ட உரிமைகளை அடைதல்  - நிவாரணம் பெறுதல் என்பதற்கான அனுமதியே உரிமையாகும் '  - ஹோல்ம்ஸ் (Holms)


4. 'சட்டம் அங்கீகரித்து பாதுகாக்க வேண்டிய நலனாகும். அதற்கு மதிப்பளித்து பாதுகாக்க வேண்டியது சட்டப்  பூர்வமான கடமையே உரிமையாகும்'. - சால்மண்ட் (Salmont)


மனித உரிமை 


     மனித உரிமை என்பது காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் , சமுதாயத்திற்கு சமுதாயம்  வேறுபடுகிறது.  மாறிவரும் காலம் / சமூகம் / பொருளாதார சூழ்நிலைக்கேற்ப பொருள் மாறிக்கொண்டே வருகிறது.


1. 'ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ளே இயற்கையாகவே உள்ள உரிமைகள் காணப்படுகிறது.  அதுவே மனித உரிமைகளாகும்.  இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை'  - ஜேக்டோனல்லி (Jack Donnely)


2. 'அச்சத்திலிருந்து விடுபடுவதே மனித உரிமைத் தத்துவத்தின் சாராம்சம்'. - டேக்  ஹம்மர்க் ஜோல்ட் 


3. 'மனித உரிமைகள் என்றால் சுதந்திரம்' - N.A. பல்கிவாலா 


4. 'எவ்வித பயமும் இன்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்'.  - டி.டி. பாசு.


5. 'மனிதனின் மதிப்பிலிருந்தும் கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" - 1933 வீயன்னா மனித உரிமைகள் மாநாட்டு பிரகடனம். 


மனித உரிமைகளின் வகைகள்:

(Classification of Rights)

     மனித உரிமைகள் என்பது மனிதர்களுக்கே உரித்தான மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய நியாயமான சலுகைகள் ஆகும்.  மனித உரிமைகள் இன்றி மனிதர்கள் மனிதர்களாக வாழ முடியாது.  மேலும் இந்த உரிமைகளை மனிதர்களிடமிருந்து பிரிக்கவும் இயலாது.  உரிமைகளும், சுதந்திரமுமே  மனிதர்களின் குணங்களையும், அறிவுக்  கூர்மையையும் மற்றும் திறமைகளையும் நிர்ணயிக்கின்றது.


     மனித உரிமைகளை அரசியல் அறிஞர்கள் இரண்டாகப்  பிரித்தனர்.

1. அறநெறி உரிமைகள் 
2.சட்ட உரிமைகள் 

1. அறநெறி உரிமைகள் 

(Moral Rights)
     சமுதாயத்தாலும் சமயங்களாலும் எடுத்துச் சுட்டிக்  காட்டப்பட்ட அறநெறிகள் அடிப்படையில்  பின்பற்றப்படும் உரிமைகள் அறநெறி உரிமைகள் எனப்படுகிறது.  இவை சமுதாயத்தால்  அங்கீகரிக்கப் பட்டவையாகும்.  இந்த உரிமைகளுக்குச் சட்டப்  பின்னணி கிடையாது.  சட்டத்தால் காக்கப் படுபவையும் அல்ல.  எந்த நீதி மன்றத்தாலும் இவ்வுரிமைகளைக்  கட்டுப்படுத்தவும் இயலாது.

2. சட்ட உரிமைகள் 

(Legal Rights)
     சட்ட உரிமைகள் சட்டங்களின் வாயிலாக உறுதி செய்யப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் காக்கப் படுகின்றன . சட்ட உரிமைகள் பாரபட்சமில்லாமல் சாதி, மத, இன, நிற வேறுபாடில்லாமல்  எல்லோருக்கும் பொருந்தும் வகையில் செயல்படுத்தப் படுகிறது.  அதே நேரம் இந்த உரிமைகளை இறுக்கிப் பிடிக்கவும், தளர்த்திக் கொள்ளவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.  சட்ட உரிமைகளை மீறியவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள்.

சட்ட உரிமைகளின் வகைகள் 

1. வாழ்வியல் உரிமைகள் 
2. அரசியல் உரிமைகள் 
3. பொருளாதார உரிமைகள் 

1. வாழ்வியல் உரிமைகள் :


       ஒரு மனிதன் நாகரிகமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் அவனுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது பாதுகாப்புடன் வாழ்க்கையை அனுபவித்தல் மற்றும் சொத்துரிமை.
     ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.
      அப்படி தலையிடுவதைத் தடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு.
     பாதுகாப்புடன் உரிமைகளை அனுபவிக்கும் அடிப்படையில் தான் மக்களின் தரமும், அரசாங்கத்தின் தரமும் மதிப்பிடப்படுகிறது.
     வாழ்வியல் உரிமைகளில் 11 உரிமைகள் உள்ளடங்கியுள்ளன.

 1 . வாழ்வதற்கான உரிமை  (Right to  Live)
 2 . சுதந்திரமாக வாழும் உரிமை (Right to  Liberty)
 3 . வேலை செய்யும் உரிமை (Right to Work)
 4 . கல்வி உரிமை (Right to Education)
 5 . சொத்துரிமை (Right to Property)
 6 . ஒப்பந்த உரிமை (Right to Contract)
 7 . பேச்சுரிமையும் ,  எழுத்துரிமையும்                           (Right to Speech and Press)
 8 . சங்கம் அமைக்க உரிமை 
       (Right to Assembly and Association)
 9 . சமய உரிமை (Right to Religion)
 10 . இல்லற வாழ்வு உரிமை
       (Right to family)
 11 . சமத்துவ உரிமை (Right to Equality)

2. அரசியல் உரிமைகள்
    (Political Rights)
     ஒவ்வொருவரும் நேர்முகமாகவோ/மறைமுகமாகவோ தனது நாட்டின் அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறான்.  அரசியல் உரிமைகள் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன.  வெளிநாட்டினருக்கு அளிக்கப் படுவதில்லை.  ஆட்சியில் உரிமைகள் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. வெளிநாட்டினருக்கு அளிக்கப்படுவதில்லை.  ஆடசியில் பங்குக் கொள்ளும் உரிமையும் அரசியல் உரிமையாகும்.

அரசியல் உரிமைகளின் வகைகள்:

1. வாக்களிக்கும் உரிமை (Right to Vote)
2. தேர்தலில் போட்டியிடும் உரிமை
    (Right to be elected)
3. அரசு பணி வகிக்கும் உரிமை
    (Right to public office)
4. முறையீடு செய்யும் உரிமை(Right to petition)
5. அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை 
     (Right to criticise the government)

3.பொருளாதார உரிமைகள் (Economic Rights)
     மனிதனின் சராசரி வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றைப் பெறும்  அளவுக்கு; உற்பத்தித் திறம் கொண்டவர்களாக மனிதர்களை உயர்த்துவதே பொருளாதார உரிமைகளின் அடிப்படைக்  கூறுகளாகும்.

1. வேலை செய்யும் உரிமை (Right  to work)
2. வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை 
     (Right to adequate wages)
3. நியாயமான வேலை நேரத்தைக் கோரும்            உரிமை (Right to fair working hours)
4. தொழிற்சாலைகளில் தன்னாட்சி உரிமை 
5. மனித உரிமைகளின் வளர்ச்சி
    (Development of human rights)

மனித உரிமை தோன்றிய வரலாறு 

கி.மு.

     கி.மு. 3260ல் லகாய் நாட்டில் ஆட்சி செய்து வந்த உருக்கினா என்ற அரசரின் காலத்திலும், கி.மு. 2300ல் ஆட்சி செய்த அக்காட் நாட்டு மன்னர் சர்கான் ஆட்சியின் போதும் மனித உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டங்கள் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

     கி.மு. 2123 முதல் 2081 வரை ஹமுராபி பாபிலோனை ஆட்சி புரிந்தார். அவர் சிறந்த சட்ட நிபுணர் ஆவார்.  அவர் சட்டங்களை தொகுத்து மக்களுக்கு அளித்தார். அதில் மனித உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டங்கள் காணப்பட்டன.  அதில் முக்கியமானது தகப்பன் சொத்தில் எல்லாப் பிள்ளைகளுக்கும் உரிமை உண்டு என்பது.

     கிரேக்க நாட்டிலும் இயற்கை உரிமை அடிப்படையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் தொடர்பான வலுவான சட்டங்கள் செயல்படுகின்றன.

     கி.மு. 450ல் ரோமானியச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன. அவை உலகிற்கு அளித்த கொடை என்று சொல்வர்.  அதில் ரோமானிய குடிமக்களுக்கு மட்டுமே உரித்தான ஜஸ்சிவிலிஸ், அடிப்படை உரிமைகளைக் காக்கும் ஜஸ்நேச்சுரல் ஆகிய சட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கி.பி.

1. மகாசாசனம் (Magna Carta 12156)
     இங்கிலாந்தை கி.பி. 1199-1216 வரை ஜான் மன்னர் ஆட்சி செய்தார்.  அவர் நாட்டு மக்களின் பல்வேறு தரப்பினரின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தார். அரசு எதிர்ப்பு சக்திகளின் தலைமை குழுவான ஸ்டீபன் லாங்டனின் தலைமையில், ஆங்கிலப் பிரபுக்கள் மனித உரிமைகள் அடங்கிய சாசனத்தை  1215ல் தயாரித்தனர். அதில் ஜூன் 15-ம் தேதி 1215ல் மன்னர் ஜான் அரசு முத்திரையிட்டு மக்களுக்கு வழங்கினார்.

மகாசாசனத்தின் உட்கூறுகள் 
     மகாசாசனம் மூன்று பகுதிகளையும், 63 உட்பிரிவுகளையும்  கொண்டதாகும்.  அதில் இரண்டாவது பகுதியில் தான் மன்னர் மக்களுக்கு வழங்கிய உரிமைகள் 41 பிரிவுகளில் விளக்கப் பட்டுள்ளது.  "மகாசாசனத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளும், சலுகைகளையும் மன்னர் மீறமாட்டார். அப்படி மீறி நடந்தால் வலுக்கட்டாயமாக அந்தச் சட்டங்களை மதித்து நடக்க கட்டாயப்படுத்தப்படுவார்" என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.  அதில் 'உரிமை liberty ' என்ற சொல் அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருந்தது.  அதில் நாட்டின் சட்டத்தைப் பற்றியும்,நாட்டு மக்களின் உரிமைகள் பற்றியும் , நாட்டை ஆளும் மன்னர் இவ்விரண்டையும் மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறது.
     இந்த சாசனம் உலகரங்கில் சுதந்திர நாடுகள் உருவாவதற்கு உரமாகப் பயன்பட்டு உரிமைகளைக் காத்து நிற்கிறது. 13-ம் நூற்றாண்டில் மக்களின் சிந்தனையில் ஒரு சீரிய இடத்தைப் பெற்றிருந்தது.

2. உரிமைகள் விண்ணப்பம்
   (Petition of rights, 1628)
     இங்கிலாந்து அரசியலமைப்பு வரலாற்றில் உரிமைகள் விண்ணப்பம் ஒரு சிறந்த இடத்தைப் பெறுகிறது.  இந்த உரிமைகள் விண்ணப்பத்தை தயாரித்தவர்கள் எலியட்,கோக்,ஷெல்டன் போன்ற சட்ட நிபுணர்கள், மன்னர் முதலாம் சார்லஸ் காலத்தில 1628, ஜூன் 7-ம் தேதி உரிமை விண்ணப்ப மசோதா பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியது.

     இந்த விண்ணப்பத்தில் "உரிய காரணம் காட்டாமலும், சட்டரீதியான விசாரணை இல்லாமலும் எவரையும் மன்னர் சிறையில் அடைக்க முடியாது.  போர் வீரர்களை தங்கள் வீடுகளில் வைத்து பராமரிக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது" போன்றன வலியுறுத்தப்பட்டன.  இந்த விண்ணப்பம் மக்களுக்குத் தேவையான உரிமைகளை உடனடியாகக் கிடைக்க செய்தது. இதனைத் தொடர்ந்து;

      *1641-ல் அரசியல் துரோக மரண              
        தண்டனைச் சட்டம்,
     * 1679 - ஹேபியல் கார்பஸ் கட்டம் 
        இயற்றப்பட்டது.

3. உரிமைகள் மசோதா (Bills of Rights 1689)

     மூன்றாவது பேருரிமைப் பத்திரம் என்று புகழப்படும் உரிமைகள் மசோதா 1689 அக்டோபர் 25ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.  இது இங்கிலாந்தில் காணப்பட்ட வரம்பற்ற  முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  இதன் மூலம் மன்னர்கள் பின்பற்றிய தெய்வீக உரிமைக்  கொள்கை ஒழிக்கப்பட்டது.  நாட்டின் அடிப்படைச் சட்டங்களுக்கு புறம்பாக நடக்க மன்னருக்கு உரிமை கிடையாது என்று வலியுறுத்தியது. மக்கள் போராடிப் பெற்ற  உரிமைகள் அனைத்தையும் இம்மசோதா மூலம் பெற்றனர்.

4. அமெரிக்க விடுதலைப் பிரகடனம் 1776

     வட அமெரிக்காவில் அமைக்கப்பட்ட 13 குடியேற்ற நாடுகள் ஒன்று சேர்ந்து தங்கள் தாய் நாடான இங்கிலாந்துக்கு எதிராக நடத்திய போரே  அமெரிக்க சுதந்திரப் போராகும்.  இந்தப் போரில் குடியேற்ற நாடுகள் வெற்றியடைந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற புதிய  சுதந்திர நாடு உருவாகியது .  மனித இனத்தின் பறிக்கப்பட்ட முடியாத அடிப்படை உரிமைகளைத் தொகுத்துக் காட்டியது.  உலகம் முழுவதும் நடைபெற்ற உரிமைப் போர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது அமெரிக்க சுதந்திர போர்.

     அமெரிக்கர்களின் இந்த உரிமைப் போராட்டத்திற்கு அடிப்படையாக  விளங்கியவர் தாமஸ் பெயின் என்பவர். 1776 ஜனவரியில் எழுதி வெளியிட்ட பொது அறிவு நூல் (Common  Sense ). அந்தக் காலத்தில் நிலவிய குழப்பங்களுக்கு சுதந்திரம் ஒன்று தான்  மருந்து என்றார்.  அதன் அடிப்படையில் 1776 மே 15-ல்  வர்ஜினியாவைச்   சேர்ந்த ரிச்சர்ட் ஹென்றி என்பவர் காங்கிரசில் அமெரிக்காவுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.  இதன் அடிப்படையில் விடுதலைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டது.

     விடுதலைப் பிரகடனத்தை வரைவதற்கு தாமஸ் ஜெபர்சன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.  சிந்த எழுத்தாளரான ஜெபர்சன் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய விடுதலை பிரகடனத்தை அழகிய ஆங்கிலத்தில் எழுதினார்.  இப்பிரகடனம் 1776, ஜுலை 4-ல் வெளியிடப்பட்டது.  இந்தப் பிரகடனம் "பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம். வேறுபாடற்றவர்கள்" என்று முழங்கியது.

  'எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.  படைத்தவனால் அவர்களுக்கு வாழ்க்கை உரிமை, சுதந்திர உரிமை,மகிழ்ச்சியை நாடும் உரிமை ஆகிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த உரிமைகள் யாராலும் பறிக்கப்பட முடியாது.  இந்த உரிமைகளைப் பெறுவதற்காகவே அரசுகள் நிறுவப்படுகின்றன.  இந்த உரிமைகளை ஒரு அரசாங்கங்கள் மீறுமானால் மக்கள் கிளர்ந்தெழுந்து புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பதற்கு உரிமை உண்டு" என்று பிரகடனத்தில் கூறப்பட்டது. குடியாட்சி தத்துவத்தை இரத்தின சுருக்கமாகச் சொல்கிறது.