(Universal Declaration of Human Rights)
ஐ .நா. சபை இதுவரை ஆற்றியுள்ள சாதனைகளைப் போற்றத்தக்கது அது வெளியிட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமாகும். எனவே, 1948 டிசம்பர் 10ஆம் தேதியை உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இப்பிரகடனமானது பல்வேறு பன்னாட்டு இணக்க ஒப்பந்தங்கள் ஏற்படவும், அறிக்கைகள் வெளியிடவும், அவற்றின் மூலம் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவும் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து. பல்வேறு நாடுகளின் நீதிமன்றத் தீர்ப்புகளிலும் இந்த பிரகடனத்தின் பிரிவுகள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்று மனித உரிமைகளைச் செயல்படுத்தும் ஒழுக்க நெறிமுறையாகவும் இது செயல்படுகிறது.
மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கம்
ஐ .நா. சாசனத்தில் உள்ள மனித உரிமைகள் குறித்த பிரிவுகளைச் செயல்படுத்த மனித உரிமைகள் குறித்த பன்னாட்டு மசோதாவை தயாரிக்க வேண்டுமென்று ஐ .நா. பொதுச்சபை முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் 1946 ஜனவரி 29-ல் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஐ .நா. மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் ஒரு ஆய்வை மேற்கொள்ளுமாறுஐ .நா. பொதுச்சபை கேட்டுக் கொண்டது. இதன்படி ஐ .நா. மனித உரிமைகள் ஆணையம் 1947, ஜனவரி மாதம் மறைந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் எட்டு பேர்கள் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
1947, பிப்ரவரி மாதம் மனித உரிமைகள் ஆணையம் தனது முதலாவது கூட்டத்தையும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் தனது இரண்டாவது கூட்டத்தையும் நடத்தியது. பன்னாட்டு உரிமைகள் மசோதா மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவை,
1. சர்வதேச மனித உரிமைப் பிரகடனம்
2. மனித உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்படிக்கை
3. இவைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகும்.
எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் அமைக்கப்பட்ட வரைவு குழுவினர் ஒரு ஆண்டு காலத்திற்குள்ளேயே அரும்பாடுபட்டு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தைத் தயாரித்து மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. மனித உரிமை ஆணையம் இந்த அறிக்கையை பல்வேறு உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி அவர்களின் கருத்தையும் கேட்டறிந்தது . தகவல் பெறும் உரிமைகள் குறித்து ஜெனிவா மாநாட்டு முடிவுகள், மகளிர் நிலைகுறித்த குழுவின் அறிக்கை, பாகுபாட்டை தவிர்க்கவும் சிறுபான்மையினரை பாதுகாக்கவும் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகியவற்றையும் இந்த ஆணையம் அலசி ஆராய்ந்தது .
உறுப்பு நாடுகள் தெரிவித்த கருத்துக்களை வரைவுக்குழு பரிசீலித்து மீண்டும் ஒரு முறை பிரகடனத்தை இயற்றி மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனை 1948 ஜூன் மாதம் ஏற்றுக் கொண்ட ஆணையம் வரைவுப் பிரகடனத்தை ஐ .நா. சமூகப் பொருளாதார சபையிடம் சமர்ப்பித்தது. அது சில மாற்றங்களுடன் ஐ .நா. பொதுச் சபையில் சமர்ப்பித்தது. பொதுச் சபை பிரகடனத்தை அலசி ஆராய்ந்து இறுதியில் ஒரு வழியாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் 1948 டிசம்பர் 10ல் பிரகடனம் வெளியிடப்பட்டது. எட்டு உறுப்பினர்கள் வராத நிலையில் 28 உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தோடு வாக்களித்தனர். சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் ஐ .நா. வின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் காணப்படுவன
1. ஒரு முகப்புரை
2. 30 ஷரத்துக்கள்
இதன் படி தனி மனிதனுக்குப் பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
முகப்புரை
முகப்புரையில் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் நோக்கத்தினை வரையறுத்துள்ளது.
நோக்கம்
1. ஐ .நா. சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளைப் பாதுகாக்க எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
2. உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான மதிப்பை வளர்க்க வேண்டும்.
3. உலக அளவில் மனித உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுதல் வேண்டும்.
4. நாடுகளிடையே நல்லுறவு வளர்க்கப்பட
5. ஆண் - பெண் சமத்துவம் திகழ
6. வாழ்க்கைத் தரம் மேம்பட
7. சமூக முன்னேற்றம் விளைய
8. அடிப்படை சுதந்திரம் போற்றப்பட
முப்பது ஷரத்துக்கள்
இந்த முப்பது ஷரத்துக்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
I . பொதுவான பிரிவுகள் (பிரிவு 1,2)
இதில் முதல் இரண்டு பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.
பிரிவு 1: சுதந்திர உரிமை
உலகிற் பிறந்துள்ள மனிதர்கள் அனைவரும் பிறப்பிலேயே சுதந்திரமானவர்கள். தமக்குள்ள உரிமைகள், மாண்புகளில் அனைவரும் சமமே. பகுத்துணரும் அறிவும் மனசாட்சியும் கொண்டு மாந்தர் அனைவரும் உடன் பிறப்புணர்வுடன் வாழும் பாங்கினை மேற்கொள்ள வேண்டும்.
பிரிவு 2: சமத்துவம்
மனிதர்களிடையே இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் சார்பு, நாடு, சமூகப்பிரிவு, சொத்து மதிப்பு, பிறப்பு ஆகிய பிற எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் வேறுபாடுகள் காட்டப்படாமல் உரிமையிலும் சுதந்திரத்திலும் சம உரிமைக்கான அருகதையுடையவர்கள் . நாடுகளிடையே எவ்வகையான வேறுபாடுகளும் காட்டப்படக்கூடாது.
II . வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகள் (பிரிவு 3 முதல் 21 வரை)
3 முதல் 21 வரை உள்ள பிரிவுகள் தனி மனிதர்களுக்குள்ள வாழ்வு(civil ) மற்றும் அரசியல் (political ) உரிமைகளைப் பற்றியது ஆகும்.
பிரிவு 3: உயிர் வாழும் சுதந்திரம்
ஒவ்வொருவருக்கும் வாழ்வுரிமை, சுதந்திரம், தனி மனிதப் பாதுகாப்பு என்பது அடிப்படையான உரிமைகளாகும்.
பிரிவு 4:
எவரையும் அடிமையாக வைத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. அடிமை முறை, அடிமை வியாபாரம் ஆகியவற்றின் அனைத்து வடிவங்களும் தடை செய்யப்பட வேண்டும்.
பிரிவு 5:
மனிதர் யாரும் யாரையும் மனிதாபிமானமற்ற முறையில் மனித மாண்பைக் குறைக்கும் வகையில் கொடுமைப்படுத்தவும், தண்டனைக்குட்படுத்தவும் கூடாது.
பிரிவு 6: மானுட அங்கீகாரம்
சட்டத்தின் முன் மனிதராக அங்கீகரிக்கப்படும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
பிரிவு 7: சமத்துவமும் சட்ட பாதுகாப்பும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவரும் சட்டப்படி சமமான பாதுகாப்புக்கு உரிமை உடையவர். எவ்வகையான பாகுபாடும் காட்டப்படாமல் சமமாக நடத்தப்பட மனிதருக்கு உரிமை உண்டு.
பிரிவு 8: நீதிபெறும் உரிமை
அடிப்படை உரிமைகள், சட்டப்படி அளிக்கப்படவும், அவை மீறப்படும் நிகழ்வுகளில் தகுதிவாய்ந்த நீதி அமைப்புகளின் மூலம் தீர்வுகள் பெறும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
பிரிவு 9:
எந்த ஒரு நபரையும் சட்டத்திற்குப் புறம்பாக, தன்னிச்சையாக கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ, நாடு கடத்துவதோ கூடாது.
பிரிவு 10:
தன் மீது சுமத்தப் பெறும் எவ்வகையான கிரிமினல் குற்றச்சாட்டினையும் சட்டபூர்வமாக எதிர்கொள்ள நியாயமான / சுதந்திரமான, ஒரு சார்பற்ற நீதி அமைப்பு மூலம் வெளிப்படையான விசாரணை பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
பிரிவு 11:
குற்றம் சுமத்தப்பட்டவர் எவருமே, குற்றம் நிரூபிக்கப்படும் வரையில், தீதறியாதவர் (Innocent) என்றே கருதப்படுதல் வேண்டும். தனது தரப்பினை முன் வைத்துத் தீர்ப்புப் பெற உரிய வாய்ப்புகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஒரு செயல் செய்யப்படும் போது சட்டப்படி குற்றமல்ல என்றிருந்து , பின்னர் அத்தகு செயல் சட்டப்படியான குற்றம் எனப் பகுக்கப்பட்டால், அந்தச் செயலை செய்த நேரத்தில் சட்டப்படி பரிந்துரைக்கப்பட்ட தண்டனையைவிட கூடுதலான தண்டனை வழங்கப்படக் கூடாது.
பிரிவு 12:
தனியொருவரின் 'தனிமை', 'குடும்பம்', 'வீடு' , 'தகவல் பரிமாற்றம்' , ஆகியவற்றில் எதேச்சிகரமாகக் குறிக்கிடுவதோ,அவரது தன்மதிப்பிற்கும் பெருமைக்கும் காயம் / ஊறு விளைவிப்பதோ தகாது. அவ்வாறான குறுக்கீடுகள், தாக்குதல்களுக்கு எதிராகச் சட்டப்படி உரிய பாதுகாப்பு பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
பிரிவு 13:
தங்கள் நாட்டில் எல்லைக்குட்பட்ட பகுதிகளின் சுதந்திரமாக நடமாடுவதற்கும், குடியிருப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. தன்னுடைய நாடு உட்பட எந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தன் தாய் நாட்டிற்குத் திரும்புவதற்கும் ஒவ்வொருவருக்கும் தன் தாய் நாட்டிற்குத் திரும்புவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
பிரிவு 14 :
தன் தாய் நாட்டில் நிலவும் கொடுஞ் சூழல்களிலிருந்து தப்பித்துப் பிற நாடுகளில் தஞ்சம் கோரிப் பெறுவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. வழக்கமான நீதி நடவடிக்கைகளுக்கு அஞ்சியோ, ஐ .நாவின் கொள்கைகளுக்கு எதிராகவோ / அரசியல் சாரா குற்றங்கள் புரிந்ததற்காகவோ அகதியாகத் தஞ்சம் கோரிப் பெறும் உரிமை கிடையாது.
பிரிவு 15:
தன் நாட்டில் தேசிய இனப் பங்காளனாகும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவர் தன் தேசிய இனத்தைத் துறக்குமாறு செய்கின்ற எந்த நடவடிக்கையும் செய்யப்படலாகாது. வேறு நாட்டுக் குடியுரிமை பெறுவதையும் யாருக்கும் தடுக்கக் கூடாது.
பிரிவு 16:
மணவயதை அடைந்த ஆண் -பெண் எவரும் இனம், நாடு, மதம் எனும் வேறுபாடுகளின் குறுக்கீடு இன்றி தமக்குள் இசைவுடன் திருமணம் புரிந்துக் கொள்ள / குடும்பம் அமைக்க உரிமை உடையவர். திருமணத்தின் போதும்,திருமண முறிவு, விவகாரத்து செய்யும் மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு.
திருமணங்கள் மணமக்களது முழு இசைவுடன் நிகழ்வதாக தான் இருக்க வேண்டும்.
குடும்பமே சமுதாயத்தின் அடிப்படை / இயற்கையான அலகு ஆகும். எனவே, அரசிடமிருந்து, சமுதாயத்திடமிருந்தும் பாதுகாப்பு பெறும் உரிமை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு.
பிரிவு 17:
ஒவ்வொருவருக்கும் தனித்தோ / பிறருடன் கூட்டுச் சேர்ந்தோ சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அந்த உரிமையை சட்டத்துக்கு விரோதமாகப் பறிக்கக் கூடாது.
பிரிவு 18:
சிந்தனை உரிமை, கருத்துரிமை, மதவுரிமை, அனைவர்க்கும் உண்டு. விரும்பி மதம் மாற்றம் செய்துக் கொள்ளவும் அனைவருக்கும் உரிமை உண்டு. மேலும் தனித்தோ / மற்றவர்களுடன் சேர்ந்தோ, அந்தரங்கமாகவோ / வெளிப்படையாகவே சமயத்தைப் போதிக்கும் சுதந்திரமும், வழிபடும் சுதந்திரம் உண்டு.
பிரிவு 19:
ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமையுண்டு. தடையின்றித் தகவல்களைப் பெறவும், பெற்ற தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், எல்லா தகவல் தொடர்புச் சாதனங்களையும் தேச எல்லையைக் கடந்து முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் உரிமையுண்டு.
பிரிவு 20:
எவருக்கும் எங்கும் சுதந்திரமாக / அமைதியான முறையில் சங்கம் அமைத்துக் கொள்ள உரிமையுண்டு.
யாரையும், எவ்வமைப்பிலும் / சங்கத்திலும் கட்டாயப்படுத்தி உறுப்பினராக்குதல் கூடாது.
பிரிவு 21:
தனது நாட்டின் அரசமைப்பில் நேரடியாகவும், சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாகவும் பங்கேற்க அனைவருக்கும் உரிமையுண்டு.
நாட்டின் அரசுப்பணியில் சேருவதற்கான சமவாய்ப்பு பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு.
மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் அரசு, நிர்வாகம், அதிகாரம் அமைய வேண்டும். குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கால அளவில் நியாயமான முறையில் நடைபெறும் தேர்தல்களின் மூலம் மக்கள் விருப்பம், தேர்வு, வெளிப்படுவதாக அமைய வேண்டும்.
III பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள்:
பிரிவு 22 முதல் 27 வரை
சர்வ தேச மனித உரிமை பிரகடனத்தில் 22 முதல் 27 வரை உள்ள பிரிவுகள் கீழ்க்கண்ட பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்துள்ளது. அவை,
பிரிவு 22:
ஒவ்வொருவரும் தமது நாட்டின் மொத்தச் செயல்பாடுகள், பன்னாட்டுக் கூட்டுறவுகள் மூலம் சமுதாய, பொருளாதார பண்பாட்டு உரிமைகள் வளர்ச்சியும் விளக்கமும் பெறவும், சமுதாயக் காப்பு கிடைக்கவும், தனது மாண்புக்கும் தனித்துவப் பாதுகாப்புக்கும் உரிமை பெறவும் அருகதையுடையவர் ஆவர்.
பிரிவு 23:
வேலை செய்ய அனைவருக்கும் உரிமை: விரும்பிய வேலை வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை: நியாயமான வேலைச் செய்ய சாதகமான சூழல் பெற உரிமை: வேலையில்லா நிலையில் பாதுகாப்பு பெறும் உரிமை: செய்யும் வேலைக்கேற்ப, பாகுபாடுகள் இல்லாமல் சம வேலைக்குச் சம ஊதியம் பெற உரிமை: மனித மாண்பு குறையா நிலையில் 'உழைப்பவரும்' அவரது குடும்பத்தாரும் 'வாழ்வூதியம்' பெற உரிமை: தொழிற்சங்கங்கள் அமைக்க; அதன் மூலம் உழைப்போர் நலன்கள் காக்கப் பெற அனைவருக்கும் உரிமையுண்டு.
பிரிவு 24:
ஊதியத்துடன் கூடிய விடுமுறை, நியாயமான வேலை நேரம், போதிய ஓய்வு மற்றும் பொழுது போக்கு உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
பிரிவு 25:
சுகாதாரம், நலவாழ்வு பெற ஒவ்வொருவருக்கும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் உரிமையுண்டு. உணவு , உடை, உறைவிடம், மருத்துவ வசதி, தேவையான சமூக சேவைகள் கிடைக்கப் பெற உரிமையுண்டு.
வேலையின்மை, நோய் , இயலாமை, முதுமை, வாழ வழியற்ற பிற நிலைகள் நிலவும் போது தக்க உதவிகள் பெற உரிமையுண்டு.
குழைந்தைகள், பேறு கால மகளிர் முழுக் கவனிப்பு பெற உரிமையுண்டு. பிறந்த குழந்தைகள் யாவருக்கும் சமச்சீரான சமுதாயப் பாதுகாப்பு பெற உரிமையுண்டு.
பிரிவு 26:
யாவருக்கும் கல்வி பெற உரிமையுண்டு. ஆரம்ப மற்றும் அடிப்படை நிலைகளில் கல்வி இலவசமாக இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். உயர் கல்வியில் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மனித ஆளுமையை முழுமையாக வளர்க்கக் கூடிய விதத்திலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களின் மீது மதிப்பை வலுப்படுத்திடும் வகையிலும் கல்வி பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் நாடுகளிடையே நல்லிணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும், நட்புணர்வையும் வளர்த்திடுவதாகவும் எந்தவிதமான கல்வியை அளிப்பது என்று முடிவு செய்யும் உரிமை பெற்றோருக்கு உண்டு.
பிரிவு 27:
தனது சமுதாயத்தின் பண்பாட்டுக் களங்களில் பங்கேற்க, அனுபவிக்க, அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களின் விளை பயனைத் தடையின்றி நுகர ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. தமது கண்டுபிடிப்புகளுக்கான உரிமை / பெருமை கண்டு பிடித்தவருக்கு உறுதி செய்யப்படுவதாகும்.
IV இதர பிரிவுகள்: (பிரிவுகள் 28 முதல் 30 வரை)
மேலே குறிப்பிடப்பட்ட வாழ்வியல், அரசியல் சமூகப் பொருளாதார, கலாச்சார உரிமைகளின் பட்டியலில் வராத பிற உரிமைகளும், கடமைகளும் கடைசி மூன்று பிரிவுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிரிவு 29:
ஒவ்வொருவருக்கும் தங்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் உண்டு. இந்தக் கடமைகளை ஆற்றும் போதுதான் மனிதன் தனது தனித்தன்மையை சுதந்திரமாகவும், முழுமையாகவும் வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு பிறரது உரிமைகளையும், சுதந்திரங்களையும் மதித்து நடக்க வேண்டும்.
அறநெறிக் கோட்பாடுகள், பொது அமைதி, பொது நலன் போன்ற வரம்புகளுக்கு உட்பட்ட உரிமைகள் பயன்படுத்தப்பட வேண்டும். உரிமைகளும், சுதந்திரங்களும் ஐ.நா.சபை நோக்கங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்பட வேண்டும்.
பிரிவு 30:
இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளையோ, சுதந்திரங்களையோ பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட ஒரு குழுவிற்கோ, அரசுக்கோ, மற்றும் தனி ஒருவருக்கோ உரிமை உண்டு என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது.