செஞ்சிலுவைச் சங்கம்(Red Cross Movement)

 




தோற்றம்:

     1859 ஆம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிரெஞ்சு பேரரசர் மூன்றாம் நெப்போலியன் படைகளுக்கும், ஆஸ்திரியப் படைகளுக்கும் இடையே வடக்கு இத்தாலியப் பகுதியிலுள்ள சால்பரினோ என்ற இடத்தில் கடும் போர் நடைபெற்றது. இப்போரின் போது தன் சொந்த வேலையாக பிரான்ஸ் வந்த ஜீன் ஹென்றி டியுனாண்ட்,பிரெஞ்சுப் படைகளுடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இவர் இந்த சால்பரினோ போரை நேரில் கண்டார்.  சுமார் 16 மணி நேரம் நடந்த போரின் முடிவில் 40,000 பிரெஞ்சு மற்றும் ஆஸ்திரிய படைவீரர்கள் மாண்டனர்.  எங்கும் மரண ஒலி, ரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.  காயம்பட்டோர் வலியினால் கதறிக் கொண்டிருந்தனர்.  முக்கால்வாசி காயம் அடைந்தோர் மருத்துவ வசதி இல்லாமல் மாண்டனர்.

     இதனை நேரில் பார்த்த ஹென்றி மூனான் அதிர்ச்சி அடைந்தார்.  காயம் பட்டோருக்கு ஆஸ்திரிய வீரர், பிரெஞ்சு வீரர் என்ற வேற்றுமை காட்டாமல், காயமடைந்த எல்லா வீரர்களுக்கும் உதவினார்.  இந்தப் போர் பயங்கரங்கள் ஹென்றியின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்தப் போரைப் பற்றி 'சால்பரினோ நினைவுகள்" (The memories of Salfarino) என்ற நூலை எழுதினார்.  இதில் போரில் காயம் அடைந்த வீரர்களைக் காப்பாற்ற ஒரு சர்வதேச உடன்பாடு வேண்டும்.  ஒவ்வொரு நாட்டிலும் நிறம், இனம், வர்க்க பேதமில்லாமல் போர்க்காலத்தில் சேவை செய்ய துயர் துடைப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது இரண்டு திட்டங்களைத் தெரிவித்தார்.  அவை

  1. ஜெனிவா ஒப்பந்தங்கள்
  2. செஞ்சிலுவைச் சங்கம்
     1863 - ல் ஐந்து பேர்கள் அடங்கிய ஜெனிவா நல்வாழ்வு சங்கம் உருவாக்கப் பட்டது .  1863 ஆம் ஆண்டு அக்டோபர் 26-ல் முதலாவது கூட்டம் கூட்டப்பட்டது. 16 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஐவர் குழுவைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  அதன்படி, அந்தக் கூட்டத்தில் 'காயமடைந்தவர்களுக்கு உதவ தயாராக உள்ள பயிற்சி பெற்ற தொண்டர்களின் அமைப்பை ஏற்படுத்த அரசு உதவ வேண்டும்.  தங்கள் நாட்டு இராணுவ மருத்துவத் துறையுடன் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     1864 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சுவிட்சர்லாந்தில் இரண்டாவது மாநாடு கூட்டப்பட்டது.  இதில் 16 நாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  போர்க் காலங்களில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப் பட்டவர்களைப் பேணவும், போர்க் கைதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

     இந்த அமைப்பின் சின்னமாக சர்வதேச செஞ்சிலுவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இதுவே பின்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கமாக உருவெடுத்தது.  பன்னாட்டு Red Cross கூட்டமைப்பு 1919 மே திங்கள் 5ஆம் நாள் நிறுவப்பட்டது.  இது உலகப் புகழ் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும்.  இது  பி. ஹென்றி டேவிட்சன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

செஞ்சிலுவை சங்கத்தின் கொள்கைகள்:

     ஏழு கொள்கைகளின் அடிப்படையில் செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது.
  1. மனித நேயம்
  2. பாரபட்சமின்மை 
  3. நடுநிலைமை 
  4. தனித்தன்மை
  5. தன்னார்வ சேவை 
  6. ஒருமைப்பாடு
  7. பன்னாட்டு அமைப்பு

1. மனித நேயம்:

     போர்க் களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எவ்வித வேறுபாடும் காட்டாமல் மனித நேயத்துடன் உதவி அளிப்பது.  எந்த சூழ்நிலையிலும் மனித துன்பங்களை தடுத்தல் / களைய முயற்சி செய்தல், உயிர் மற்றும் உடல் நலத்தைப் பாதுகாத்தல்.

     இது பரஸ்பர உடன்பாடு, நட்பு, கூட்டுறவு மற்றும் மனிதர்கள் மத்தியில் நிலையான ஒற்றுமை ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது.

2. பாரபட்சமின்மை:

     உதவி செய்வதில் எந்த பாரபட்சமும் காட்டப் படுவதில்லை.  நாடு , இனம், மத உணர்வுகள், அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டாமல் அவசர உதவி தேவைப் படுபவர்களுக்கு முன்வந்து உதவி செய்கிறது.

3. நடுநிலைமை:

     போரின் போது எந்தப் பக்கமும் சாயாமல், எந்த வேறுபாடும் பார்க்காமல், நடுநிலையுடன் நின்று எல்லோர்க்கும் உதவி செய்கிறது.

4. தனித்தன்மை:

     செஞ்சிலுவைச் சங்கமானது ஒரு சுதந்திரமான அமைப்பு ஆகும்.  ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சங்கங்கள் மனித சேவையில் ஈடுபடும் போது தனித்தன்மையுடன் செயல்படுகிறது.

5. தன்னார்வ சேவை:

     செஞ்சிலுவைச் சங்கம் ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.  எந்த வகையிலும் அது லாப நோக்கில் செயல்படுவது இல்லை.

6. ஒருமைப்பாடு:

     ஒரு நாட்டில் ஒரே ஒரு செஞ்சிலுவைச் சங்கம் தான் இருக்க முடியும்.  அது எல்லோரையும் உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும்.  தனது பணிகளில் மனித நேயத்தின் சாயல் இருக்க வேண்டும்.

7. பன்னாட்டு அமைப்பு:

     செஞ்சிலுவைச் சங்கமானது ஒரு உலகளாவிய அமைப்பாகும். ஒருவருக்கொருவர் உதவி செய்வதில் எல்லா சங்கங்களுக்கும் சம உரிமை உண்டு.

பணிகள்:

  • இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் கொந்தளிப்பு நேரங்களில் தேவையான உதவிகளை செய்தல்.
  • ஒரு நாட்டிற்குள் அந்த நாட்டின் பொது அதிகாரிகளுக்குத் துணையாகச் செயல்படுதல்.
  • போர்க்காலங்களில் அளவற்ற பொறுப்புகளை ஏற்றல்.
  • மருத்துவ மனைகளை அமைத்து செயல்படுதல்.
  • செவிலியர்களுக்கான பயிற்சி அளித்தல்.
  • ஊனமுற்றோருக்கு உதவுதல்.
  • இரத்ததான நிலையங்களை ஏற்படுத்துதல்.
  • வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் நிலநடுக்கம் மற்றும் பிற சம்பவங்களில் அவதி உற்றோர்க்கு நிவாரண உதவி அளித்தல்.
  • தாய், சேய் நலம் பேணுதல்.

பெற்ற விருதுகள்:

     உலகிலேயே மூன்று முறை நோபல் பரிசு பெற்ற ஒரே சேவை நிறுவனம் உலக செஞ்சிலுவை சங்கம்.

இந்திய செஞ்சிலுவை சங்கம்

     இந்திய செஞ்சிலுவை சங்கமானது 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஒவ்வொரு முதல் குடிமகன் (குடியரசுத் தலைவர்) அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஆவார். இவர் தலைமையில் ஒரு நிர்வாக கமிட்டி செயல்படுகிறது.

     இந்திய செஞ்சிலுவை சங்கம் நிறுவப்பட்ட அதே ஆண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் கிளைகள் தொடங்கப்பட்டன. நம் தமிழ்  நாட்டில் மாநிலக் கிளை மட்டும் அல்லாது மாவட்ட கிளைகளும் இயங்கி வருகின்றன. இதற்கு மேதகு ஆளுநர் அவர்கள் மாநிலக் கிளையின் முதன்மை புரவலர் ஆவார்.  மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியாளர்களே அலுவல் சாரா தலைமைப் பொறுப்பு வகித்து வருகின்றார்.  மாநிலங்களில் மட்டும் அல்லாது கல்லூரிகளிலும் , பள்ளிகளிலும் 'Youth Red Cross' , Junior Red Cross' என்று செயல்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக