தோற்றம்:
1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு போர்ச்சுக்கீசிய மாணவர்கள் லிஸ்பன் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு சித்திரவதை செய்யப்பட்டனர் என்ற செய்தியை பென்பன் செய்தித்தாள்களில் படித்தார். அவர்கள் செய்த குற்றம் விருந்து கேளிக்கையில் ஈடுபட்டதே ஆகும். இது குறித்து போர்ச்சுக்கீசிய அரசுக்கு பென்பன் பல கடிதங்கள் எழுதி இந்த மாணவர்களின் விடுதலைக்கு முயன்றார். ஆனால் பயனில்லை. 1961-ல் பென்பன் "பொது மன்னிப்புக்கான விண்ணப்பம்" என்ற ஒரு வருட கால இயக்கத்தை எரிக்பேக்கர் மற்றும் லூயிக் கூப்பருடன் சேர்ந்து தொடங்கினார்கள். பீட்டர் பென்சன் ஒரு வழக்கறிஞர். அவர் 'லண்டன் அப்சர்வர்' என்ற பத்திரிகையில் "எட்டு கைதிகளின் துயரம் என்ற கட்டுரையை வெளியிட்டு பேரும் புகழும், நிதியும், ஆதரவும் பெற்றார். பின்பே சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். 156 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு இனங்களைச் சார்ந்த பள்ளி சிறுவன் முதல் தள்ளாடும் முதியவர் வரை பல்லாயிரக்கணக்கானவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 42க் கூட்டுக்குழுக்களாக இந்த அமைப்பு செயல்படுகிறது.
சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனத்தின் நோக்கம்
1. "மனசாட்சிக் கைதிகளை விடுவிப்பது - (மனசாட்சி கைதிகள் என்பவர் அரசியல் / சமய நம்பிக்கைகளை தனது விருப்பம் போல் பின்பற்றியதற்காகவும் , எந்த வகையிலும் வன்முறையில் ஈடுபடாமலும் / தூண்டாமலும், தங்களது இன , நிற மற்றும் மொழிப்பற்றில் நம்பிக்கை கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள்.)
2. சிறைச்சாலை இறப்புகள் , மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுதல், பெண் கைதிகளைக் கொடுமைக்கு உள்ளாக்குதல், சிறையிலிருந்து காணாமல் போதல், மரண தண்டனை விதித்தல் ஆகியவற்றை எதிர்த்தல்.
3. அரசியல் கைதிகளுக்கு விரைவான விசாரணையின் மூலம் தீர்ப்பு வழங்குதல்.
4. 'தங்கள் நம்பிக்கையை பின்பற்றுவதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்படாத ஒரு உலகத்தை ஏற்படுத்துதல்.
உறுப்பினர்கள்
உலகெங்கும் இந்த நிறுவனத்திற்கு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மருத்துவர்கள், பள்ளி மாணவர்கள், வயதில் மூத்தவர்கள், தொழிற்சங்கவாதிகள் , புகழ் பெற்றவர்கள், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்கள் பெண் உரிமை பற்றி பேசும் வீராங்கணைகள் , ஆசிரியர்கள் மற்றும் பலர்.
தலைமையகம்
இந்நிறுவனத்தின் தலைமையகம் லண்டனில் உள்ளது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த இதன் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பிரதிநிதிகளை பன்னாட்டு சபை கூட்டத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். இந்த பன்னாட்டு சபையே கொள்கை முடிவுகளையும் செயல் திட்டங்களையும் வகுக்கும். இதன் செயற் குழு ஆண்டுக்கு 4 முறை கூடி நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராயும்.
பணிகள்
இதில் பணிகளை ஆற்றுவதற்குத் தன்னிச்சையான ஆர்வலர்படை செயல்படுகிறது.
1) முதல் கட்டப் பணி சரியான தகவல்களைத் திரட்டுவதாகும்.
2) அதிகாரப்பூர்வமான தகவல்களை ஆராய்வது
3) நாட்டுக்கு குழுக்களை அனுப்புவது / வழக்கு விசாரணையைக் கண்காணிக்க வழக்கறிஞர்களை அனுப்புவது.
4) சாட்சிகளை பேட்டி காண்பது
சின்னம்
முள்வேலிக்குள் காணப்படும் மெழுகுவர்த்தியே இந்நிறுவனத்தின் சின்னமாகும். "இருளை நிந்திப்பதை விட விளக்கை ஏற்றுவது நல்லது' என்ற பழமொழிக்கேற்ப இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மெழுகுவர்த்தி சிறையில் வாடும் கைதிகளைக் குறிக்கிறது.
வழங்கப்பட்ட விருதுகள்
- மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆற்றிய பணிக்காக 1977 -ல் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- சிறப்பாக சேவை புரிந்ததற்காக 1978 -ல் ஐ.நா. சபையின் மனித உரிமை பரிசும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக