சானடோரியம்(Sanatorium) உருவான வரலாறு

    
     Sanatorium என்ற சொல்லுக்கு பிணி நீக்குவதற்கான இல்லம் என்று அகராதி பொருள் தருகிறது. Sanatorium என்பது அரிதாக சானிட்டோரியம் என்றும் அழைக்கப்படுகிறது.  நீண்ட கால நோய்களை நீக்குவதற்கான வசதிகளைக் கொண்ட மருத்துவ இல்லம் இந்த சானடோரியம் ஆகும்.  இது பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) கண்டுபிடிப்பதற்கு முன் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்I காசநோய் (Tuber Culosis - TB) சிகிச்சையுடன் தொடர்புடைய சொல் ஆகும்.
     
     சானடோரியாவின் முதல் ஆலோசனை, 1836 ஆம்  ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சுட்டன்  கோல்ட் பீல்டில் (Sutton Cold Field) ஒரு சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.  இதை நிறுவியவர் ஜார்ஜ் போடிங்டன்  (George Bodington) ஆவார்.  இதில் நோயாளிகள் நீண்ட காலம் தங்கி சிகிச்சைப் பெற்றனர்.   1840 ஆம் ஆண்டு "நுரையீரல் நுகர்வு சிகிச்சை மற்றும் குணப்படுத்துதல்" என்ற கட்டுரையை வெளியிட்டார் .  இவருடைய அணுகுமுறை மற்றும் கருத்துகள்  விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டது.  இதனால் இவருடைய சுகாதார நிலையம் புகலிடமாக மாற்றப்பட்டது.


டாக்டர் சவ்ரிமுத்து 

     டாக்டர் டேவிட்  ஜேக்கப் ஆரோன் சவ்ரிமுத்து  (Dr. David Jacob Aaron Chowry Muthu) என்பவர் தனியார் காசநோய் நிபுணர்.  இவர் 1864ல் பிறந்தவர். இங்கிலாந்தில் எம்.டி., எம்.ஆர்.சி.எஸ் (MD and MRCS) பட்டம் பெற்றவர்.  1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷாய்ச் சேர்ந்த பெண்ணான போக்ஸ் என்பவரை மணந்தார்.




  காசநோய் உள்பட நெஞ்சக மருத்துவத்தில் கைதேர்ந்தவராக சவ்ரிமுத்து இருந்தார். சுற்றுப்புறத் தூய்மை, தூய காற்றை சுவாசித்தல் போன்ற விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சையை அளித்துவந்தார் . 1900 ஆம் ஆண்டு இங்கில்வுட் சானடோரியத்தின் (Inglewood Sanatorium at the Isle of Wight) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


      1910ஆம் ஆண்டு சாமர்செட் (Somerset) பகுதியில் உள்ள மெண்டிப்  மலைப்பகுதியில் (Mendip Hills) சானடோரியம் (Hill Grove Sanatorium) ஒன்றை நிறுவி காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்.  சானடோரியம் அமைத்து சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக விளங்கினார் சவ்ரிமுத்து .




     1917ஆம் ஆண்டில் விரிவடையாத அந்த சுகாதார 
நிலையத்தில் அவரது உயர் நோயாளிகளில் ஒருவராக, கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் இருந்தார். டாக்டர் சவ்ரி முத்துவின் மற்றுமொரு நண்பர் மகாத்மா காந்தி ஆவார்.  அவர்கள் இயற்கையாக குணப்படுத்துதல் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த செல்வாக்கின் காரணமாக சவ்ரிமுத்து இந்தியாவிற்கு வரத் தொடங்கினார். அப்பொழுது காசநோய் நோயாளிகளுக்கு ஒரு சுகாதார நிலையம் தொடங்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது.

     அதன் விளைவாக தாம்பரத்தில் பச்சை மலை அடிவாரத்தில் 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார்.  ஏப்ரல் 9, 1928 ஆம் ஆண்டு 12 படுக்கைகளுடன் கூடிய சுகாதார நிலையத்தை அமைத்தார்.  அன்றைய சுகாதார அமைச்சர் சி.பி. இராமசாமி அய்யர் தொடங்கிவைத்தார்.  பின்னர் ஒரு நாள் சவ்ரி முத்துவின் மனைவி இங்கிலாந்தில் மரணமடையவே அவர்  மீண்டும் இங்கிலாந்து செல்ல நேர்ந்தது .  அதனால் அவர் தாம்பரம் சானடோரியத்தை 1937 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று அரசிடம் விற்றார்.  மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.






      அரசு ஏற்று நடத்தியப்  பின்னர் சானடோரியத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே வசதி, ஆய்வக வசதி, படுக்கை வசதி ஆகியவை உருவாக்கப்பட்டன.  இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் இந்த சானடோரியம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது.  நாடு விடுதலைப் பெற்ற பிறகு மத்திய அரசு தாம்பரம் சானடோரியத்தில் காசநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  அங்கே தங்கியிருந்த நோயாளிகளுக்குத் தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு 750 படுக்கை வசதிகளுடன் சானடோரியத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியது.

   
 1993 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் காசநோய்க்காக இங்கே தங்கி இருவர் சிகிச்சை பெற்றனர்.  அப்போதுதான் எய்ட்ஸ் நோயாளிகளுக்கெனத் தாம்பரம் சானடோரியத்தில் சிகிச்சை தொடங்கியது .  அத்துடன் அதன் கண்காணிப்பாளராக புகழ்பெற்ற மருத்துவர் செ .ந. தெய்வநாயகம் இருந்தபோது எய்ட்ஸ் நோயாகிகளுக்கு அலோபதி - சித்த கூட்டு மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.  தற்போது 'தாம்பரம் டிபி சானடோரியம்' என்று அறியப்படும் இந்த மருத்துவமனை தமிழகத்திலேயே காசநோயாளிகளுக்கென பிரத்தியேகமான மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.  இந்தியாவின் மிகப் பெரிய எய்ட்ஸ் நோய்  மையமாகவும் தாம்பரம் சானடோரியம் உள்ளது.



   பிரிட்டிஷ் இந்தியாவில் குடில்களுடன் தொடங்கிய இந்த சானடோரியம் , இன்று சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையாகவும் கிரேட்டர் சென்னையின் தனி அடையாளமாகவும் உருவெடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக